ஷா ஆலம், ஜன 23: சிலாங்கூரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், மாணவர் ஒருவர் காயமடைந்ததாகப் பரவியுள்ள சம்பவத்தை கல்வி அமைச்சகம் (KPM) மிகக் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், பள்ளியின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசமும் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளது.
அச்சம்பவம் தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளதாகவும், அதே நேரத்தில் உண்மையான காரணத்தை கண்டறிய சிலாங்கூர் மாநில கல்வித் துறை (JPN) உள்நிலை விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
“சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர் காயமடைந்ததாக சமூக ஊடகங்களில் பரவியுள்ள சம்பவத்தை நான் முழுமையாக கவனத்தில் எடுத்துள்ளேன்.
இந்த சம்பவம் தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளது. அதே சமயம், சிலாங்கூர் மாநில கல்வித் துறை உள்நிலை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சமூகத்தின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசமும் இல்லை,” என அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் எப்போதும் பாதுகாக்கப்பட்டு, முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை அனைத்து பள்ளி நிர்வாகிகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (PPD) மற்றும் மாநில கல்வித் துறைகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
இதற்கு முன்பு, சமூக ஊடகங்களில் பரவிய தகவலின்படி, தந்தை ஒருவர் ஒன்றாம் ஆண்டில் பயிலும் தனது மகன் கழிவறைக்கு மெதுவாக நடந்துச் சென்றதற்காக சக வகுப்பு மாணவர் ஒருவர் அவனது முகத்தில் அறைந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், தனது மகனின் முகப்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


