கோல திரங்கானு, ஜன 22 - தொலைபேசி மோசடியில் சிக்கிய 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சேமிப்புத் தொகையான 60,000 ரிங்கிட்டை இழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவர் நேற்றிரவு புகார் செய்திருப்பதாகக் கோல திரங்கானு காவல்துறை தலைவர் துணை கமிஷனர் அஸ்லி முகமட் நோர் உறுதிப்படுத்தினார்.
நவம்பர் 27ஆம் தேதி அன்று, மலேசிய இணையப் பாதுகாப்பு அமைப்பிலிருந்து அழைப்பதாக சந்தேக நபர் தொலைபேசி மூலம் அம்மாணவனை தொடர்பு கொண்டுள்ளார்.
அதன்பிறகு, மறுநாள் தன்னை காவல்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்ட மற்றொரு நபர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அந்த மாணவர் பணமோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி கோரியுள்ளார்.
அதோடு வங்கிக் கணக்கை காலி செய்து, தாங்கள் வழங்கும் தற்காலிக வங்கிக் கணக்கிற்கு சேமிப்பு பணத்தை மாற்றுமாறும் அந்த மாணவனிடம் கூறப்பட்டடுள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை மொத்தம் 59,400 ரிங்கிட்டை அந்த வங்கிக் கணக்கிற்கு சம்பந்தப்பட்ட மாணவர் அனுப்பியுள்ளார்.
பின்னர், அந்த கும்பலிடம் தொடர்பு கொள்ள முடியாமல் போனதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாணவர் புகார் செய்ததால் குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அஸ்லி முகமட் தெரிவித்தார்.


