ஷா ஆலம், ஜன 22 – இந்த ஆண்டு முதல் சிலாங்கூரில் விதிக்கப்படும் நிலைத்தன்மை (sustainability) கட்டணத்தை ஆதரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை பொறுப்புடன் சுற்றுலா துறையை முன்னெடுக்க ஒரு முக்கிய அம்சமாகும் என சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் கூறினார். மாநில அரசின் அதிகாரப்பூர்வப் பகுதிக்கு உட்பட்ட இந்த கட்டணம், சுற்றுலா வளர்ச்சிக்கான நிதியை உருவாக்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்படுகிறது.
இதே போன்ற கட்டணங்கள் பகாங், பினாங்கு மற்றும் மலாக்கா போன்ற பிற மாநிலங்களிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் சிலாங்கூரில் நிலைத்தன்மை கட்டணத்தை அறிமுகப்படுத்துவதை ஆதரித்து வரவேற்கிறோம். ஏனெனில், இது பொறுப்பான சுற்றுலாவிற்கான முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. ஆனால் இதன் செயல்பாட்டிற்கு, சுற்றுலா துறையிலுள்ள அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் விழிப்புணர்வு தேவை என்றார்.
“இந்த நிதி பாரம்பரிய மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலா கட்டமைப்பின் பராமரிப்பு மற்றும் சுற்றுலா விளம்பரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும்,” என்று தியோங் நாடாளுமன்றத்தில் கூறினார்.
சிலாங்கூரில் ஹோம்ஸ்டே செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் பணியும், கட்டண அறிமுகத்தால் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சபாக் பெர்ணம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாம் சலானின் கேள்விக்குணாவர் இவ்வாறு பதிலளித்தார்.
கட்டணத்தை செயல்படுத்தும் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், தனது அமைச்சகம் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றும் என்று அவர் கூறினார்.
ஜனவரி 1 முதல் சுற்றுலா வசதிகளுக்கு நிலைத்தன்மை கட்டணத்தை சிலாங்கூர் விதித்துள்ளது.


