மலேசியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்க டத்தோஶ்ரீ ஜோஹாரி கனி சம்மதம்

21 ஜனவரி 2026, 9:08 AM
மலேசியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்க டத்தோஶ்ரீ ஜோஹாரி கனி சம்மதம்

கோலாலம்பூர், ஜனவரி 21 – மலேசியா மற்றும் அமெரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் (ART) தொடர்பான மறுஆய்வு முன்மொழிவுகளை, நாடாளுமன்றத்தின் இருதரப்பு காகஸ் (Caucus) குழுவுடன் பகிர்ந்து கொள்ள மத்திய அரசு உடன்பட்டுள்ளது.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி இன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், இந்த ஒப்பந்தம் குறித்து எழுந்துள்ள பல்வேறு தவறான புரிதல்கள் மற்றும் நாட்டின் இறையாண்மை தொடர்பான கவலைகளைக் களைய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.

எனவே, இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவதற்கு (Ratify) முன்னதாகவே, இது குறித்த தெளிவான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜோஹாரி கனி, "இந்த ஒப்பந்தம் தொடர்பான எனது அமைச்சின் முன்மொழிவுகள் தயாரானதும், அது குறித்து நாம் விரிவாக விவாதிப்போம்.

இது எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் கொடுக்கும் உறுதிமொழி. நான் விவாதத்திற்கு அழைக்கும்போது தயவுசெய்து நீங்கள் வராமல் இருந்துவிடாதீர்கள்," என நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த ஒப்பந்தத்தினால் மலேசியாவின் பொருளாதார இறையாண்மைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்பதற்கான எழுத்துப்பூர்வ உறுதியை அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கம் கோரி வருவதாகத் தெரிவித்தார். 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.