டாவோஸ், ஜன 21 – டென்மார்க்கிற்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ளும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சிக்கு, ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்கள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இத்தகைய ஆக்கிரமிப்புப் போக்கிற்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பியத் தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) ஒன்றுகூடிய ஐரோப்பியத் தலைவர்கள், ட்ரம்ப்பின் "அமெரிக்காவே முதன்மை" (America First) எனும் கொள்கை தற்போது அச்சுறுத்தும் நிலையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இது குறித்துக் கருத்துரைத்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ட்ரம்ப்பின் இந்த தன்னிச்சையான முடிவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான நீண்டகால உறவைச் சிதைப்பதோடு, உலகளாவிய ரீதியில் பதற்றத்தை உருவாக்கும் என எச்சரித்தார்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வரும் வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸில் அவசர உச்சிமாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன், தனது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இராணுவ அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டாவோஸ் கூட்டத்தில் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ட்ரம்ப் கூறியுள்ள போதிலும், அடுத்தகட்டமாகத் தான் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து எவ்விதத் தெளிவான விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை.



