ஷா ஆலம், பிப் 22: பூச்சோங், லெபோ புத்ரி, பண்டார் புத்ரி பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக உயர்மட்ட யூ-முறைப் பாலம் (Elevated U-Turn Bridge) ஒன்றை சுபாங் ஜெயா மாநகராட்சி (எம்பிஎஸ்ஜே) நிர்மாணிக்க உள்ளது.
போக்குவரத்து மேலாண்மை திட்டம் (TMP) கட்டம் 1-இன் கட்டுமானப் பணிகள் நாளை தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறும். இக்காலக்கட்டத்தில் சாலைகள் ஏதும் (லேன்) மூடப்படாது என்றும் சுபாங் ஜெயா மாநகராட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பணிகள் திங்கள் முதல் சனி வரை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
“சாலை பயனாளர்கள் கவனமாக வாகனத்தைச் செலுத்தவும், அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறிவிப்புப் பலகைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் வரை போக்குவரத்து சீராகவும் பாதுகாப்பாகவும் அமைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








