புத்ராஜெயா, ஜன 20- மலேசிய நீதித்துறை, ஊழல் வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், மேல்முறையீடுகளைக் கையாளவும் ஒரு புதிய "ஊழல் தடுப்புச் சிறப்பு உயர்நீதிமன்றத்தை" (Mahkamah Tinggi Khas Rasuah) அமைக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பு முதற்கட்டமாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் செயல்படுத்தப்படும் என்று கூட்டரசு நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் கட்டளைக்கு இணங்க, மலாயா தலைமை நீதிபதி மற்றும் நாட்டின் தலைமை நீதிபதி ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த நீதிமன்றம் அமைக்கப்படுகிறது.
ஊழல் வழக்குகளை அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் விசாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அத்தகைய வழக்குகளுக்குத் தனிப்பாதை (Special Lane) அமைத்து விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மாமன்னர் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார்.
நீதித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, நாட்டின் நீதி அமைப்பின் நேர்மையை உறுதிப்படுத்துவதோடு, ஊழல் வழக்குகளைத் திறமையாகவும் வெளிப்படையாகவும் கையாள்வதற்கான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
தற்போது நாடு முழுவதும் 14 சிறப்பு அமர்வு நீதிமன்றங்கள் ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் நிலையில், ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


