கோலாலம்பூர், ஜன 20: மடாணி அரசாங்கம், ஐந்து மில்லியன் பெறுநர்களை உள்ளடக்கிய 2026 சும்பாங்கான் துனாய் ரஹ்மா நிதி உதவியின் கட்டம் 1க்கான பண விநியோகத்தை இன்று தொடங்கியுள்ளது.
இந்த உதவி தொகை, 3.7 மில்லியன் குடும்பங்கள் மற்றும் 1.3 மில்லியன் துணை இல்லாத மூத்த குடிமக்களுக்கு அவர்களின் தகுதிகளுக்கு ஏற்ப RM100 முதல் RM500 வரை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தெரிவித்தார்.
"சாரா நிதியுதவி செயல்படுத்தலுடன் இப்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ள STRஇல் ஏற்படும் மேம்பாடுகள், தகுதியுள்ள குழுக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மிகவும் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படுகின்றன," என அவர் முகநூல் பதிவில் விவரித்தார்.
பண்டிகைக் காலம் போன்ற சமயங்களில் கூடுதல் உதவியாக STR வழங்கப்படுவதோடு சாரா ஒரு நிலையான மாதாந்திர அடிப்படை ஆதரவாக செயல்படுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தை எதிர்கொள்வதில் யாரும் ஒதுக்கப்படாமல், ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடன் வாழ முடியும் என்பதனை மடாணி அரசாங்கம் தீவிரமாக உறுதி செய்து வருவதாக அன்வார் கூறினார்.
"இந்த உதவியைப் பெறுபவர்கள் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்," என அவர் தெரிவித்தார்.


