கோலா பெராங், ஜன 20: போலி முதலீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட தொழிற்சாலை தொழிலாளி ஒருவர் RM166,000 இழந்தார்.
ஜனவரி 15 அன்று, 43 வயதான பாதிக்கப்பட்ட பெணுக்கு லிட்மேட்ச் சமூக வலைத்தளத்தில் ஓர் ஆணின் அறிமுகம் கிடைத்ததாக உலு திரங்கானு மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஷாருடின் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
தனக்குப் புதிதாக அறிமுகமான சந்தேக நபர், தன்னை UOA குரூப் பில்டிங் எக்ஸலன்ஸ் முதலீட்டுத் திட்டத்தில் சேர வற்புறுத்தியதாகப் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். இந்த முதலீட்டு திட்டம் அதிக லாப விகிதங்களுடன் விரைவான வருமானத்தை அளிக்கும் என்று கூறப்பட்டது.
"சந்தேக நபரின் இனிமையான வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண், சேமிப்பு, நகைகள், பரம்பரை சொத்துக்களை விற்று, அப்பணத்தை அம்முதலீட்டின் மூலதனமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.
"சந்தேக நபரின் அறிவுறுத்தலின்படி, பாதிக்கப்பட்டவர் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் RM166,000 மதிப்புள்ள 16 பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார்," என ஷாருடின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
எனினும், பல்வேறு காரணங்களுக்காக சந்தேக நபர் வாக்குறுதியளிக்கப்பட்ட இலாபத்துடன் முதலீட்டு மூலதனத்தையும் திருப்பித் தர மறுத்தபோது தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்ட பெண் உணர்ந்ததாக அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, சந்தேக நபரைத் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், பாதிக்கப்பட்டவர் நேற்று காவல்துறையில் புகார் அளித்தார்.
"இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. எனவே, மோசடிக்கு ஆளாகாமல் இருக்க, அதிகாரப்பூர்வத் தளங்களிலிருந்து உண்மையான தகவல்களைப் பெற பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், செமக்முலே போர்டல் அல்லது 997 NSRC (தேசிய மோசடி உதவி மையம்) வழியாகவும் தகவல்களைச் சரிபார்க்கலாம் என காவல்துறை நினைவூட்டுகிறது என ஷாருடின் தெரிவித்தார்.


