கோலாலம்பூர், ஜனவரி 18: மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா, வரும் ஜனவரி 25-ஆம் தேதி வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாகத் தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களில் வெப்பமான வானிலை நிலவும் என்றும் மழை குறையும் என்றும் கணித்துள்ளது.
வானிலை முன்கணிப்பு மாதிரிகளின் ஆய்வின்படி, இக்காலக்கட்டத்தில் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது 34 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்று அதன் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்தார்.
"இருப்பினும், தீபகற்ப மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன," என்று அவர் இன்று முகநூல் பதிவின் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களைப் பெற பொதுமக்கள் மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பார்க்குமாறும், 'myCuaca' செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இதற்கிடையில், ஜனவரி 21 முதல் 25 வரை நாட்டின் கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "இத்தகைய பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் சிறிய படகுகள், கடல் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுக்களுக்குப் பாதுகாப்பற்றது," என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


