கோலா குபு பாரு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக இடமாற்ற மையத்தில் குடியிருப்பு

18 ஜனவரி 2026, 4:03 AM
கோலா குபு பாரு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக இடமாற்ற மையத்தில் குடியிருப்பு

ஷா ஆாலம், ஜனவரி 18- நேற்று இரவு கோலா குபு பாரு (KKB), தாமான் அம்பாங் பெச்சாவில் உள்ள நான்கு வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக இடமாற்ற மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அடிப்படை உதவிகளை ஒருங்கிணைப்பதற்கும், சம்பந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் முக்கிய ஆவணங்களைப் புதுப்பிக்க உதவுவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சாக் தாவ் தெரிவித்தார்.

இரவு 11.45 மணியளவில் தற்காலிக இடமாற்ற மையம் திறக்கப்பட்டதை மாவட்ட அதிகாரி யுஹானாஸ் அவுரி கமாருடின் உறுதிப்படுத்தினார். தீவிபத்தில் இழந்த அல்லது சேதமடைந்த முக்கிய ஆவணங்களை பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பெறுவதற்கு ஏதுவாகச் சம்பந்தப்பட்ட துறைகளை நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம்," என்று அவர் மீடியா சிலாங்கூரைத் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

முதற்கட்ட சோதனையில் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உடைகள் மற்றும் அன்றாடத் தேவைக்கான பொருட்களை இழந்துள்ளனர். எனவே, அந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வீடுகளைச் சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட பிற உதவிகள் குறித்து முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் தீவிபத்தில் நான்கு ஓடுதள வீடுகள் முற்றிலும் அழிந்தன, இருப்பினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவிப் பணிப்பாளர் அகமட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், இரவு 9.39 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், இரவு 9.57 மணிக்குத் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததாகவும் தெரிவித்தார்.

சுமார் 33 தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் தன்னார்வத் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் இரவு 10.25 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிகாலை 1.28 மணிக்கு மீட்பு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்தன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.