ஷா ஆலம், ஜன 16: கடந்த ஆண்டு அக்டோபரில் பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் 16 வயது மாணவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் விசாரணைக்கு தகுதியானவர் என்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் கிட்சன் ஃபூங், இதனை சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.
பேராக்கில் உள்ள பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையின் மனநல மருத்துவர் இயன் லாயிட் அந்தோணி கடந்த மூன்று மாதங்களாக குற்றம் சாட்டப்பட்டவரின் மனநிலையை மதிப்பீடு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
"குற்றம் சாட்டப்பட்டவரால் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது மற்றும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள முடியும் என்பதையும் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
"வழக்கு விசாரணை செயல்பாட்டில் அது மிக முக்கியமான விஷயம், எனவே இந்த வழக்கு தொடரும்," என்று அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, விசாரணைக்காகக் காத்திருக்கும் போது, தனது கட்சிக்காரர் இங்குள்ள புஞ்சாக் ஆலம் சீர்திருத்த மையத்தில் சிறார் தடுப்பு பிரிவில் வைக்கப்படுவார் என அவர் கூறினார்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட மாணவன் மாதத்திற்கு ஒரு முறை ஆலோசனை மற்றும் சிகிச்சை அமர்வுகளில் கலந்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதாக கிட்சன் ஃபூங் தெரிவித்தார்.
இந்த வழக்கை பிப்ரவரி 6 ஆம் தேதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அம்மாணவன் மீது குற்றவியல் சட்டப் பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வரை தண்டனை விதிக்கப்படும்.
இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவி பலமுறை கத்தியால் குத்தப்பட்ட பின்னர் பள்ளி கழிப்பறையில் இறந்து கிடந்தார்


