ஷா ஆலாம், 16 ஜனவரி- கடந்த ஜனவரி 13-ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜாலான் PJU 1A/7 பகுதியில் சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டிய ஒரு லாரியை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி பறிமுதல் செய்தது. சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில், அமலாக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் கண்காணிப்பு மற்றும் ரகசிய உளவு நடவடிக்கையின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்தது.
அந்த லாரியில் வீட்டு உபயோகக் கழிவுகள் மற்றும் மின்சார ஒயரிங் வேலைகளின் போது ஏற்படும் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டதாக MBPJ தனது முகநூல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த லாரி தற்போது பறிமுதல் செய்யப்பட்டு, வாகனக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை 1999-ஆம் ஆண்டு தூய்மைக்கேட்டைத் தடுக்கும் துணைச் சட்டத்தின் 6(2) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. நகரின் தூய்மை விதிகளை மீறும் எந்தவொரு தனிநபர் அல்லது தரப்பினருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் MBPJ வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும் என்றும், பதிவுசெய்யப்பட்ட கழிவு மேலாண்மை ஒப்பந்தக்காரர்களின் சேவையைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நகரின் தூய்மை, அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதை உறுதி செய்யும் பொருட்டு, சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் நடவடிக்கைகள் குறித்துத் தகவல் தெரிந்தால் உடனடியாகப் புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


