ஷா ஆலம், 15 ஜனவரி:- செராஸ் ஜெயா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் வணிக உரிமம் காலாவதியானது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் போது காஜாங் நகராட்சி மன்றம் அந்த உணவகத்தின் வணிக உபகரணங்களைப் பறிமுதல் செய்தது.
முன்னதாக வழங்கப்பட்ட எச்சரிக்கை நோட்டீஸை உணவக உரிமையாளர் பின்பற்றத் தவறியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காஜாங் நகராட்சி மன்றம் தெரிவித்தது. இந்த பறிமுதல் நடவடிக்கை 2007-ஆம் ஆண்டு வணிகம் மற்றும் தொழில்துறை உரிம துணைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
"பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக நடவடிக்கைக்காக காஜாங் நகராட்சியின் அமலாக்கத் துறையின் பொருட்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன," என்று காஜாங் நகராட்சி மன்றம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
சமூகத்தின் நல்வாழ்வையும் நலனையும் பாதுகாப்பதற்காக, சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதில் தங்களின் அர்ப்பணிப்பு தொடரும் என்றும் அந்த உள்ளூர் அதிகார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 8-ஆம் தேதி, செராஸ் ஜெயா சுற்றுவட்டாரத்தில் காஜாங் நகராட்சி மன்றத்தின் அமலாக்கத் துறை, கட்டிடக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் உரிமம் மற்றும் சிறு வணிகர்கள் துறை ஆகியவை இணைந்து இந்த வணிக உரிமச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன.




