ஷா ஆலம், 15 ஜனவரி: மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையினர் (AKPS), நேற்று புக்கிட் காயு ஹீத்தாம் பகுதியில் RM66,000 மதிப்பிலான பன்றி இறைச்சிகளைக் கடத்தும் முயற்சியை முறியடித்தனர்.
முறையான இறக்குமதி ஆவணங்கள் இன்றி அந்தப் பன்றி இறைச்சி கொண்டு வரப்பட்டது சோதனையில் தெரிய வந்ததாக புக்கிட் காயு ஹீத்தாம் AKPS தளபதி சீனியர் அசிஸ்டென்ட் கமிஷனர் முகமட் நசருடின் எம் நசிர் தெரிவித்தார். நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட வாகனம் ஒன்று எடை மேடைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அதன் மொத்த எடை 4,200 கிலோகிராம் எனப் பதிவானதாக அவர் கூறினார்.
"இருப்பினும், விரிவான சோதனைக்குப் பிறகு அந்த வாகனத்தின் நிகர எடை 2,200 கிலோகிராம் என மட்டுமே பதிவானது. இந்த எடை வித்தியாசம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், சோதனையில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட பன்றி இறைச்சி என்பது உறுதி செய்யப்பட்டது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சல் நோய் அச்சுறுத்தல் காரணமாக, தாய்லாந்திலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு 2011-ஆம் ஆண்டு மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் சட்டத்தின் பிரிவு 11(1)-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
அதே வேளையில், குடிநுழைவு தொடர்பான பல்வேறு விதிமீறல்களுக்காக புக்கிட் காயு ஹீத்தாம் நுழைவாயிலில் ஒன்பது வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக முகமட் நசருடின் கூறினார்.


