ஷா ஆலாம், ஜனவரி 14- சொத்துக்களை மீட்டு எடுப்பதை வலுப்படுத்தவும், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) தனது புதிய அமலாக்க உத்தியை நாளை அறிவிக்கவுள்ளது.
மிகவும் முறையான விசாரணை முறைகளை வலியுறுத்தும் இந்த உத்தி, குறிப்பாக மக்களின் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை நடத்தும் குற்றவாளிகளை பொறுப்பேற்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அசம் பாக்கி கூறுகையில், தற்போதைய சவால்களை எதிர்கொள்ளவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப அமலாக்க நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் ஆணையம் இன்னும் திறம்பட முன்னேற வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு எம்.ஏ.சி.சி மேற்கொண்ட தண்டனை நடவடிக்கைகள் மூலம் RM8.4 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டது. இது ஆணையம் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு மிகச்சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தச் சாதனையின் தொடர்ச்சியாகவே புதிய அணுகுமுறை அமையும் என்று அவர் மேலும் கூறினார்.
ஊழல் வழக்குகளை கண்டறிதல், விசாரித்தல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது ஆகியவற்றில் எம்.ஏ.சி.சியின் கவனம் செலுத்தி வரும் வேளையில், நிதித் தடயவியல் மற்றும் பண மோசடி தொடர்பான நிதிக்குற்ற விசாரணைகளில் ஆணையம் வலுவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது என்று அசம் பாக்கி குறிப்பிட்டார்.
"சொத்து மீட்பு என்பது இனி சந்தேகத்திற்குரியவர் களின் வீடுகளுக்குச் சென்று ரொக்கப் பணத்தைக் கைப்பற்றுவது மட்டுமல்ல; பினாமி கணக்குகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியைக் கண்டுபிடிப்பது மாகும். இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப் போலவே அதிக அளவிலான சொத்துக்கள் மீட்கப்படும் என்று உறுதியளிக்க முடியாது என்றாலும், பெரும் நிதி இழப்பை ஏற்படுத்திய தனிநபர்கள் மற்றும் உயர்மட்ட (High-profile) வழக்குகளில் எம்.ஏ.சி.சி அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
"நாளை அறிவிக்கப்படவுள்ள முக்கிய உத்திகளில் ஒன்று, நவீன தொழில்நுட்பம் மற்றும் முறையான வழிமுறைகள் மூலம் சொத்து மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதாகும். கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட உத்திகளை விட எம்.ஏ.சி.சி இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்." நிதிக் குற்றவாளிகள் கடுமையான தண்டனைகளை எதிர் கொள்வதை உறுதி செய்ய, நவீன மற்றும் பயனுள்ள முறைகள் மூலம் ஊழியர் நிர்வாகம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.


