அம்பாங், ஜனவரி 14: பண்டார் பாரு அம்பாங், ஸ்ரீ நீலம் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் குப்பை சேகரிப்பில் ஏற்படும் தாமதம் குறித்து அளித்த புகாரைத் தொடர்ந்து, அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (எம்பிஏஜே) நேற்று அங்கு நேரடி பணி மேற்கொண்டது.
எம்பிஏ ஜேயின் நகரச் சேவை மற்றும் சுகாதாரத் துறையின் தலைமையிலான இந்த ஆய்வில், புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் துணை சபாநாயகருமான முகமட் காம்ரி கமாருடின் மற்றும் மண்டலம் 8-இன் MPAJ மன்ற உறுப்பினர் டத்தோ யாப் வீ செங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் குப்பை லாரிகள் உள்ளே செல்வதற்கு வழித்தடங்களை ஆய்வு செய்ய, MPAJ கட்டிட ஆணையப் பிரிவு (COB), KDEB கழிவு மேலாண்மை நிறுவனம் (KDEBWM) மற்றும் ஸ்ரீ நீலம் அடுக்குமாடி கூட்டு மேலாண்மைக் குழு (JMB) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
குப்பை சேகரிப்பு முறையைச் சீரமைக்கவும், நிலவரத்தை மதிப்பிடவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டதாக எம்பிஏ ஜே அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
"அதே வேளையில், எம்பிஏ ஜே, KDEBWM மற்றும் JMB ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மூலம், நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி குப்பை சேகரிப்பை உறுதி செய்ய முடியும்," என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில், KDEBWM குப்பை சேகரிப்பு அட்டவணையை முறையாக பின்பற்றுவது, எம்பிஏஜே அவ்வப்போது கண்காணிப்பை மேற்கொள்வது மற்றும் குப்பை அறைகளை வகை வாரியாக மறுசீரமைப்பது உள்ளிட்ட பல மேம்பாட்டு நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்த அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை (CCTV) பொருத்தவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் சம்மதித்தனர். குடியிருப்பாளர்கள் மற்றும் வெளியாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், குறிப்பிட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் குப்பைகளை வீசுவதை தடுக்கும் அறிவிப்புப் பலகைகள் அங்கு வைக்கப்படவுள்ளன.
அம்பாங் ஜெயா குடியிருப்பாளர்களின் நலனுக்காகத் தூய்மையான மற்றும் வசதியான சூழலை உறுதி செய்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதை எம்பிஏ ஜே மீண்டும் வலியுறுத்தியது. தூய்மை தொடர்பான ஏதேனும் புகார்கள் இருந்தால், எம்பிஏ ஜேயின் பொது புகார் மேலாண்மை அமைப்பு இணையதளம் https://mpaj.spab.gov.myஅல்லது 1-800-22-8100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழியாகத் தெரிவிக்கலாம்.
ஸ்ரீ நீலம் அடுக்குமாடி குடியிருப்பில் குப்பை புகார்: எம்பிஏஜே ஆய்வு
14 ஜனவரி 2026, 9:46 AM


