ஷா ஆலாம், ஜனவரி 14: மலாக்கா, புக்கிட் ரம்பாய் தொழில்பேட்டையில் உள்ள மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்றில், வெல்டிங் கருவி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.
மதியம் 1.32 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி முகமட் ஹபிட்சத்துல்லா ரஷித் தெரிவித்தார். அழைப்பு வந்த ஆறு நிமிடங்களுக்குள் 11 வீரர்கள் அடங்கிய குழுவினர் மீட்புப் பணிக்காகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றடைந்தபோது, 44 வயதுடைய ஆடவர் ஒருவர் 90 சதவீத தீக்காயங்களுடன் அங்கேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. " 32 வயது ஆடவர் சுமார் 5 சதவீத தீக்காயங்களுக்கு உள்ளாகி இருந்தார். பாதிக்கப்பட்ட இருவரும் மேல் நடவடிக்கைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்," என்று அவர் கூறினார்.
தற்போது அந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்துக்கான உண்மையான காரணத்தைத் தீயணைப்புத் துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


