கிள்ளான், 14 ஜனவரி: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 944 பள்ளிகளைச் சேர்ந்த 900,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2026-ஆம் ஆண்டிற்கான ஆரம்பக் கல்வி உதவித்தொகையை (BAP) பெறுகின்றனர். இது பெற்றோர்களின் நிதிச் சுமையைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது.
அனைத்துக் மாணவர்களுக்கும் வழங்கப்படும் இந்த உதவித்தொகை கல்வியாண்டைச் சிறப்பாகத் தொடங்குவதை உறுதி செய்வதில் அரசாங்கத்திற்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது என சிலாங்கூர் கல்வி இயக்குநர் வான் நோர் ஆஷிகின் அபு காசிம் தெரிவித்தார்.
"இந்த 2026-ஆம் ஆண்டுக்கான உதவித் தொகையைப் பெறும் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்கள், இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் ஊக்கத்தையும் சிறப்பையும் மேம்படுத்தி, மதம், இனம் மற்றும் நாட்டிற்குப் பயனுள்ள மனிதர்களாக அவர்கள் உருவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த உதவித்தொகை வழங்கும் பணிகள் 2026, ஜனவரி 12ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது 30 நாட்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று மாநில அளவிலான 2026-ஆம் ஆண்டு BAP காசோலை வழங்கும் விழாவில் அவர் கூறினார்.
கிள்ளான், மேரு தேசிய இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மேலும் இந்தத் திட்டம் சுமுகமாகவும் முறையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, 2025-ஆம் ஆண்டின் 5-ஆம் எண் நிதிச் சுற்றறிக்கையின் விதிகளையும் நடைமுறைகளையும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களும் பின்பற்றுவதை அவர் நினைவுறுத்தினார்.


