ஜார்ஜ்டவுன், ஜனவரி 13: 20,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, அசிஸ்டெண்ட் சூப்பரிண்டெண்டன் (ASP) பதவி கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் ஜனவரி 16-ஆம் தேதி வரை இந்தத் தடுப்புக் காவல் உத்தரவை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) விண்ணப்பத்தை ஏற்று, மஜிஸ்திரேட் நத்ரதுன் நயிம் முகமட் சைடி பிறப்பித்தார்.
பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வரும் 58 வயதுடைய அந்த சந்தேக நபர், நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார். 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஐந்து நபர்களிடமிருந்து அவர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டம் 2009-இன் பிரிவு 17(a)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது


