ஷா ஆலாம், ஜன 13- எதிர்வரும் ஜனவரி 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் உலு லங்காட்டில் நடைபெறவிருந்த "Glamping With Pride" எனும் ஓரினச்சேர்க்கை (LGBT) ஆதரவு நிகழ்ச்சிக்கு எதிராக சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் (MAIS) மற்றும் சிலாங்கூர் முஃப்தி ஆகியோருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று இஸ்தானா புக்கிட் காயாங்கானில் சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் தலைவர் டத்தோ செத்தியா சாலேஹுடின் சாயிடின் மற்றும் சிலாங்கூர் முஃப்தி டத்தோ செத்தியா அன்ஹார் ஓபீர் ஆகியோரைச் சந்தித்த போதே சுல்தான் இந்த அதிரடி உத்தரவை வழங்கினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் எவ்விதமான ஓரினச்சேர்க்கை சார்ந்த திருவிழாக்கள், ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் அல்லது அத்தகைய அமைப்புகளை நிறுவுவதற்குத் தமக்குச் சம்மதம் இல்லை என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இத்தகைய செயல்கள் இயற்கை நியதிகளுக்கு எதிரானது என்றும், தனிப்பட்ட பாவங்களாகக் கருதப்பட்டாலும் இவை ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் இறைவனின் கோபத்தையும் சாபத்தையும் தேடித்தரும் என்று சுல்தான் எச்சரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாம் இத்தகைய ஓரினச்சேர்க்கை கலாச்சாரத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு, இது நபிகள் நாயகம் காலத்து 'லூத்' சமூகத்தின் அழிவுக்குக் காரணமான செயல்களுக்கு ஒப்பானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்தியின் அடிப்படையில், அரச மலேசிய போலீஸ் (PDRM) மற்றும் உள்ளூர் அதிகாரப் பேரவைகள் (PBT) இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி மனித உரிமை என்ற போர்வையில் இளைஞர்கள் இத்தகைய சீரழிவு பாதையில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இஸ்லாமிய மாண்புகளைச் சிதைக்க எவருக்கும் அனுமதி இல்லை என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது


