புத்ராஜெயா, 12 ஜனவரி: இந்த வாரம் முழுவதும் வழங்கப்படவுள்ள ஆரம்பப் பள்ளி கல்வி உதவித்தொகை (BAP) விநியோகத்தின்போது பெற்றோர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்வி அமைச்சு ஊக்குவித்துள்ளது.
உதவித்தொகை விநியோக நடைமுறைகளைப் பெற்றோர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வதை உறுதி செய்யவும், தங்களின் பிள்ளைகளுக்குச் சரியான தொகை கிடைப்பதை உறுதிப்படுத்தவும் அவர்களின் பங்களிப்பு அவசியம் என்று கல்வி அமைச்சின் துணைச் செயலாளர் டத்தோ அகமது சுஹைமி அன்டுட் தெரிவித்தார். “மேலும்பெற்றோர்கள் பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இந்த உதவித்தொகை மாணவர்களைச் சென்றடைந்த பிறகு, அது வேறு நோக்கங்களுக்காகச் செலவிடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள 5.2 மில்லியன் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த ஆரம்பப் பள்ளி கல்வி உதவித்தொகை (BAP), பள்ளிச் செலவுகளுக்காகப் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் ஒரு முயற்சியாகும் என்று அவர் கூறினார்.


