ஷா ஆலம், 12 ஜனவரி- யூ.பி.எஸ்.ஆர் (UPSR) மற்றும் பி.டி.3 (PT3) தேர்வுகளை மீண்டும் கொண்டு வருவதற்கான தேவைகள் குறித்து கல்வி அமைச்சு ஆய்வைத் தொடங்கியுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் கருத்துக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரின் பார்வைகளையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது அமைச்சரவை மற்றும் பொதுமக்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஃபட்லினா சீடெக் கூறினார். இந்தத் தேர்வுகள் நீண்ட காலமாக நடத்தப்பட்டவை என்பதால், அவை நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் தற்போது ஒட்டுமொத்த வளர்ச்சி சார்ந்த மதிப்பீடுகளில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ஆய்வு இந்த ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டு, விரைவில் அமைச்சரவை மற்றும் பொதுமக்களிடம் விளக்கப்படும்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, இந்த ஆண்டுக்கான கல்வித் தவணையில் மலேசியா முழுவதும் சுமார் 800,000 முதலாம் ஆண்டு மற்றும் படிவம் 1 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். கோவிட்-19 காரணமாக 2020-இல் ரத்து செய்யப்பட்ட யூ.பி.எஸ்.ஆர் தேர்வு, பல்வேறு தரப்பினருடனான ஆலோசனைகளுக்குப் பிறகு ஏப்ரல் 2021-இல் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. அதேபோல், பி.டி.3 தேர்வு 2022-இல் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டு (PBS) முறையாக மாற்றப்பட்டது.
அதே வேளையில், பள்ளித் தவணையைத் தொடங்கியுள்ள பள்ளிகளுக்கு நேற்று முதல் 150 ரிங்கிட் உதவித்தொகை விநியோகிக்கத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் இந்தப் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆசிரியர்களைச் சந்தித்து, பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி குறித்துக் கேட்டறிய வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்," என்று அவர் கூறினார்


