கோலாலம்பூர், ஜனவரி 9- கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் குழந்தை பராமரிப்பு மையத்தில் இரண்டு குழந்தைகளை துன்புறுத்தல் செய்ததாக தொடர்புடைய இரண்டு குற்றச்சாட்டுகளில், குழந்தை பராமரிப்பாளர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் செய்ததாக ஒப்புக் கொண்டார்.
சரவாக் சிபுவைச் சேர்ந்த 27 வயதான பெராடா ரண்டாய், நீதிபதிகள் முன்னிலையில், குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றச்சாட்டுகளின் படி, ஒன்பது மாத பெண் குழந்தையின் கன்னத்தில் அறைந்தது டன், தலையில் தட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும், ஆறு மாத ஆண் குழந்தையின் முகத்தை தலையணையால் மூடி, வலுக்கட்டாயமாக பால் குடிக்க வைத்ததாகவும் அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள், கடந்த ஆண்டு டிசம்பர் 15 அன்று, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, கம்போங் பாரு சாலக் செலாத்தான் பகுதியில் அமைந்துள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(அ) இன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.
நீதிமன்றம், இரு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 12 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க அனுமதி அளித்ததுடன், வழக்கின் விவரங்கள் மற்றும் தண்டனை தொடர்பாக ஜனவரி 16 தேதி அன்று நிர்ணயித்தது. இதற்கிடையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த மற்றொரு குழந்தை பராமரிப்பாளர் யெல்லா பிரிசில்லியா, அதே ஆண் குழந்தையின் கால்களை நெரித்ததும், தலையணையால் முகத்தை மூடியதும், வலுக்கட்டாயமாக பால் குடிக்க வைத்தது ஆகிய செயல்களை செய்ததாக குற்றம் ஒப்புக்கொண்டார்.
குழந்தை பராமரிப்பு மையத்தில் இரண்டு குழந்தைகளை துன்புறுத்தியதாக பராமரிப்பாளர் குற்றம் ஒப்புக்கொண்டார்
9 ஜனவரி 2026, 3:48 AM


