அங்காரா, ஜனவரி 8 – இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு துருக்கியின் உயரிய ‘குடியரசு விருது’ வழங்கப்பட்டது.
இந்த விருது, அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகனால் நேற்று அதிபர் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் வழங்கப்பட்டது. பிரதமரின் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துருக்கிப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு அமைந்தது.
இந்த விருது வழங்கும் விழாவில் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் , உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காடீர் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, இந்த விருதை தனிப்பட்ட முறையில் அல்லாமல், ஒட்டுமொத்த மலேசிய மக்களின் சார்பாக மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொண்டதாக அன்வார் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். “இந்த விருது, இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவின் நெருக்கத்தையும், நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் உலகளாவிய அமைதியை பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.
இந்த அங்கீகாரம், இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், மலேசியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான பல்வேறு மூலோபாயத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒரு தூண்டுதலாக அமையும் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
2025 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மலேசியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் RM21.2 பில்லியனை எட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டில், துருக்கி மலேசியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், மிகப்பெரிய ஏற்றுமதி இலக்காகவும், மேற்கு ஆசிய நாடுகளில் நான்காவது பெரிய இறக்குமதி ஆதாரமாகவும் இருந்தது. அப்போது மொத்த வர்த்தக மதிப்பு RM24.15 பில்லியனாக பதிவாகியுள்ளது.


