அங்காரா, ஜனவரி 8 — பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துருக்கி அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகன் நேற்று, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை முன்னுரிமைத் துறைகள் பலவற்றிலும் வலுப்படுத்தும் வகையில் ஏழு ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, எர்டோகனின் அழைப்பின் பேரில் பிரதமர் அன்வாரின் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துருக்கி பயணத்துடன் இணைந்து இந்த கையெழுத்து விழா நடைபெற்றது. அதிபர் மாளிகையில் கையெழுத்திடப்பட்ட ஆவணங்களில், உயர்நிலை மூலோபாய ஒத்துழைப்புக் குழுவை (HLSCC) நிறுவுவதற்கான கூட்டுப் பிரகடனம் அவற்றில் அடங்கும்.
மலேசிய உள்துறை அமைச்சுக்கும் டெசான் கப்பல் கட்டும் நிறுவனத்திற்கும் இடையே பலநோக்கு பணிக் கப்பலை கொள்முதல் செய்வதற்கான ஏற்பு கடிதம் (LOA) ஒன்றும் கையெழுத்தானது. மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் (MCMC) துருக்கி குடியரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப ஆணையமும், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இரு நாடுகளும் மலேசியா-துருக்கி உயர்கல்வி கூட்டுக்குழுவின் முதல் கூட்டத்தின் குறிப்புகளையும் பரிமாறிக் கொண்டன.
"இந்த ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டது, மக்கள் நலனுக்கான மூலோபாய நலன்களையும் நீண்டகால நன்மைகளையும் அடிப்படையாகக் கொண்ட கட்டமைக்கப்பட்ட, முற்போக்கான மற்றும் பரஸ்பர இருதரப்பு உறவை உருவாக்குவதற்கான மலேசியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளின் பொதுவான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது," என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.


