கிள்ளான், ஜன 7: நேற்று மாலை பண்டார் சுல்தான் சுலைமானில் உள்ள கோழி பதப்படுத்தும் வளாகம் ஒன்றில் கிள்ளான் அரச நகர மன்றம் (MBDK) சோதனை நடத்தியது.
கடந்த டிசம்பரில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து, தொழில்துறை மண்டலத்தில் அமைந்துள்ள வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டதாக அதன் உரிம இயக்குநர் முகமட் இஸ்ஸாத் மொக்தார் தெரிவித்தார்.
சோதனை முடிவில், அந்த வளாகம் மேரு மற்றும் காப்பார் பகுதிகளுக்கு சுமார் 5,000 கோழிகளை வழங்கி வருவதாகவும், வணிக நடவடிக்கைகள் தொடர்பான இரண்டு உரிமங்களைக் கொண்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டது.
"முதல் உரிமம் இறைச்சி அல்லது கோழியை சேமித்து வைத்தல், மொத்தமாக விற்பனை செய்தல் மற்றும் விநியோக சேவைகளை வழங்குதல் ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியது.
"இரண்டாவது உரிமம் பதப்படுத்தப்பட்ட கோழியை பேக்கேஜிங் செய்தல், சேமித்தல், மொத்தமாக விற்பனை செய்தல் மற்றும் விநியோக சேவைகளை வழங்குதல் தொடர்பானது" என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட வளாகத்திற்கு எதிராக அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் உணவு நிறுவன உரிமம் (MPK) 2007 இன் துணைச் சட்டம் (UUK) 15 இன் கீழ் மூன்று அபராதங்கள் விதிக்கப்பட்டது.
"ஆறுகளை மாசுபடுத்தும் திறன் கொண்ட வடிகால்களில் கழிவுகளை வெளியேற்றுவதற்காக, உள்ளூர் அரசாங்கச் சட்டம் 1976 பிரிவு 70 இன் கீழ் மற்றொரு அபராதம் வழங்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
நிர்ணயிக்கப்பட்ட உரிம நிபந்தனைகளுக்கு வளாகம் இணங்கத் தவறினால், வளாகத்தின் உரிமம் ரத்து செய்யப்படலாம் என்றும் அவர் கூறினார்.


