ஷா ஆலம், ஜனவரி 6: ஹுலு லங்காட், பத்து 14, கம்போங் சுங்கை செமுங்கிஸ் பகுதியில் தனது வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது குளவி கொட்டியதில் ஆடவர் உயிரிழந்தார்.
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 29 வயதான அப்துல் ஹமீட் முகமட் டௌஃபிக், அதே நாளில் பத்து 14 சுகாதார கிளினிக்கில் அவசர சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. சம்பவத்திற்கு முன்பு அப்துல் ஹமீட் பள்ளிவாசலில் நண்பர்களுடன் தொழுகையை முடித்துவிட்டு, தனது திருமண ஏற்பாடுகளுக்காக வீட்டை சுத்தம் செய்ய வீடு திரும்பினார் என்று உயிரிழந்தவரின் நண்பர் கைருல் அஃபெண்டி ரஹீம் கூறினார்.
"மேலும் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, தனது வீட்டின் வெளியே உள்ள குளிரூட்டியின் பகுதியைத் திறந்தபோது, அவரை மண் குளவி கொட்டியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று அவர் கூறினார். குளவி கொட்டிய பிறகு, பாதிக்கப்பட்டவர் உடனடியாக அண்டை வீட்டுக்குச் சென்று சம்பவம் குறித்து தெரிவித்த சில நிமிடங்களிலேயே மயக்கமடைந்தார்.
அப்துல் ஹமீட்டிற்கு சுமார் 30 நிமிடங்கள் அவசர சுவாச உதவி (CPR) வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டதாகவும் கைருல் தெரிவித்தார்.
குடும்பத்தினர் இன்னும் பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர். இருப்பினும், பாதிக்கப்பட்டவருக்கு இருந்த சைனஸ் பிரச்சனை மற்றும் கடல் உணவு ஒவ்வாமை காரணமாக குளவி விஷம் அவரது உடலில் வேகமாகப் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


