ஷா ஆலம், ஜன 5: ஜனவரி முதல் நவம்பர் 2025 வரை மொத்தம் 9,296 நபர்கள் போலி முதலீட்டு மோசடிக்குப் பலியாகி, மொத்தம் RM1.37 பில்லியனை இழந்துள்ளனர்.
இதில் 31 முதல் 40 வயதுடைய குழுவே அதிகம் குறிவைக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இது மோசடிக்காரர்கள் டிஜிட்டல் முறையை நன்றாக கையாளும் திறன் கொண்ட நபர்களை குறிவைக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது என மலேசியக் காவல்துறை வணிக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
"பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும், நிதி சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன், குறிப்பாக சமூக ஊடகங்களில் உள்ள எந்தவொரு முதலீட்டையும் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அத்துறை முகநூலில் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் கண்டறியப்படும் முதலீட்டு மோசடியின் தன்மைகள் பின் வருவன அடங்கும்:
குறுகிய காலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என்ற வாக்குறுதிகள் - ஆபத்து இல்லை அல்லது குறைவு என்று நம்பவைப்பது.
உடனடியாக செயல்பட அழுத்தம் - வரையறுக்கப்பட்ட சலுகைகள் அல்லது அச்சுறுத்தல்கள் வழங்குவது.
பதிவு செய்யப்படாத அல்லது உரிமம் பெறாத நிறுவனங்கள்.
பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைக்க செல்வாக்கு மிக்க நபர்களைப் பயன்படுத்துதல்.
ஆகவே, முதலீட்டாளர்கள் அதிக இழப்புகளைத் தடுக்க, முதலீடு செய்வதற்கு முன் அதிகாரிகளிடம் சரிபார்த்து, சந்தேகத்திற்கிடமான சலுகைகளைப் பற்றி புகாரளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று PDRM வலியுறுத்துகிறது.


