கரகாஸ், ஜனவரி 5- வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. சிறைக்கு அதிபர் மதுரோ அழைத்து செல்லப்பட்ட வீடியோவை வெளியிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதிச் செய்தது. மேலும் வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த நிலையில், இடைக்கால அதிபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெனிசுலாவின் தற்போது இருக்கும் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ இடைக்கால அதிபராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்தது. முன்னதாக, வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''வெனிசுலாவின் ஒரே அதிபர் நிக்கோலஸ் மதுரோ மட்டும்தான். அவரை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அமெரிக்கா விடுதலை செய்ய வேண்டும்'' என இடைக்கால அதிபர் டெல்சி தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்து பாதுகாப்புப் படைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளதாக அவர் கூறினார்.


