பினாங்கு, ஜனவரி 2 – கடந்த நவம்பர் மாதம் முதல் இணையவழி முதலீட்டு மோசடியில் தனியார் நிறுவன ஆலோசகர் ஒருவர் RM690,500 இழந்துள்ளார்.
71 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண், டிக்டாக் செயலி வழியாக அதிக இலாபம் ஈட்டும் பங்கு முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்ததாகவும், பின்னர் வாட்ஸ்அப் செயலி வழியாக ஒரு பெண் சந்தேக நபருடன் தொடர்பு கொண்டதாகவும் பினாங்கு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
“குறுகிய காலத்தில் 100 விழுக்காடு இலாபத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்த முதலீட்டில் ஆர்வம் கொண்ட பாதிக்கப்பட்டவர், உறுப்பினர் பதிவை மேற்கொள்ளவும் முதலீடு செய்யவும் QNTCX செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர் கடந்த நவம்பர் 10 முதல் டிசம்பர் 23 வரை நான்கு வெவ்வேறு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு 20 பணப் பரிமாற்றங்கள் மூலம் மொத்தம் RM690,500 செலுத்தியுள்ளார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
உறுதியளிக்கப்பட்ட இலாபம் கிடைக்காததுடன், இலாபத்தை எடுக்க கூடுதல் பணம் செலுத்தும்படி கேட்கப்பட்டபோதுதான் பாதிக்கப்பட்டவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் என்று அஸிஸி கூறினார். கடந்த டிசம்பர் 29 அன்று வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் புகார் அளித்ததாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தண்டனைச் சட்டப் பிரிவு 420-இன் கீழ் மோசடி வழக்காக விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.


