ஷா ஆலம், டிச 30 : ஷா ஆலம் எல்.ஆர்.டி 3 (LRT3) பாதையின் தற்போதைய நிலை, சேவை தொடங்கும் நேரம் உள்ளிட்ட விவரங்கள், 2026 ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என்று பிரசரானா மலேசியா பெர்ஹாட் (Prasarana) தெரிவித்துள்ளது.
தற்போது ஷா ஆலம் நோக்கிச் செல்லும் ஒவ்வொரு ரயிலும் தோல்வியில்லா சோதனை ஓட்டம் (Failure-Free Run – FFR) கட்டத்தில் இருப்பதாகவும், இந்த சோதனைகள் நிலப் பொது போக்குவரத்து முகமை (APAD) மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் ஷா ஆலம் பாதை செயல்பாட்டு தலைவர் முகமட் ஆரிஃபின் இட்ரிஸ் தெரிவித்தார்.
“ஏற்கனவே மூன்று ரயில்கள் தேவையான தூரத்தை எட்டியுள்ளன. எனினும், APAD மேற்கொள்ளப்பட்ட சோதனை அளவுகோல்களை மீண்டும் பரிசீலிக்கும் என்பதால், ரயில்கள் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
“எனவே, ஷா ஆலம் எல்.ஆர்.டி பாதை தொடர்பான தற்போதைய நிலை விவரங்கள், எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் அறிவிக்கப்படும்,” என்று சிலாங்கூர் ஊடகப் பணியாளர்களுடன் நடந்த நட்பு சந்திப்பின் போது கூறினார்.
இம்மாதத் தொடக்கத்தில், எல்.ஆர்.டி 3 பாதையின் புதிய தொடக்க தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று பிரசரானா தெரிவித்தது. இது சோதனைக்காலத்தில் கண்டறியப்பட்ட சில தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக காலம் தாமதமாகியுள்ளது.


