ஷா ஆலம், டிச 24: கோலா குபு பாரு (KKB) பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் குடியிருப்பாளர்களின் வசதியை மேம்படுத்தும் நடவடிக்கையாக, 20 சோலார் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் மேலும் விளக்குகள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) மூலம், தேவைகள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதியின் மக்கள் பிரதிநிதியான பாங் சோக் தாவ் தெரிவித்தார்.
“எம்பிஎச்எஸ் 20 சோலார் விளக்குகளை நிறுவியுள்ளது. குடியிருப்பு பகுதிகள் மேலும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்க, எதிர்காலத்தில் கூடுதல் விளக்குகள் நிறுவப்படும்,” என்றார் அவர்.
மேலும், கோலா குபு பாரு சமூகத்தினருடன் அவர் நடத்திய நட்பு சந்திப்பு மூலம், குடியிருப்பாளர்கள் தங்களின் புகார்கள் மற்றும் உள்ளூர் பிரச்சனைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டு, அவற்றிற்குப் பயனுள்ள வகையிலும் தீர்வுகள் காண முயற்சிக்கப்பட்டதாகக் கூறினார்.
இதனுடன் தொடர்புடைய மற்றொரு முன்னேற்றமாக, லெம்பா பெரிங்கின் மற்றும் கெர்லிங் பகுதிகளை இணைக்கும் தனியார் சாலை தொடர்பான விவகாரம் நேர்மறையான முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும், சாலை பராமரிப்பிற்காக நில உரிமையாளர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் மூலம் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பும் போக்குவரத்து வசதியும் உறுதி செய்ய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும் என சோக் தாவ் கூறினார்.
“நில உரிமையாளரின் ஒப்புதல், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கும் சீரான போக்குவரத்திற்கும் தேவையான சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது,” என்றார் அவர்.


