கோலாலம்பூர், டிச 23 - எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டத்தை (SHMMP) உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அமைச்சகம் (கே.பி.டி.என்) அமல்படுத்தவிருக்கின்றது.
இத்திட்டத்தின் கீழ் 14 வகை பொருட்கள் விலை கட்டுப்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் இறக்குமதி செய்யப்பட்ட எலும்புள்ள ஆட்டிறைச்சி, இறக்குமதி செய்யப்பட்ட உருண்டை முட்டைக்கோஸ், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கேரட், தக்காளி, சிவப்பு மிளகாய், பச்சை குடைமிளகாய், பெரிய சிவப்பு வெங்காயம், பெரிய மஞ்சள் வெங்காயம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் கோழி இறக்கைகள் ஆகியவை அடங்கும்.
கிறிஸ்துமஸ் 2025 SHMMP செயல்படுத்தும் காலம் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. இதில் நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களின் நலன்களுக்கு இடையிலான சமநிலையைக் கருத்தில் கொண்டு, வர்த்தகர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாமல் விலைகள் நியாயமானதாக இருக்கும் என கே.பி.டி.என் அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி கூறினார்.
"இத்திட்டம் செயல்படும் காலம் முழுவதும் போதுமான அளவு பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக KPDN, வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும்.
இத்திட்டக் காலத்தில், வணிகர்களின் இணக்கத்தைக் கண்காணிக்க பொதுச் சந்தைகள் மற்றும் ஷோப்பிங் மையங்கள் உள்ளிட்ட மூலோபாய இடங்களில் KPDN அமலாக்க அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என்றார் அர்மிசான் முஹமட்.


