சிரம்பான், டிசம்பர் 22: ஜாலான் மம்பாவில் நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் மோதி விபத்துக்குள்ளானதில் இரு ஆடவர் உயிரிழந்தனர்.
இரவு 9.34 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில், புரோட்டான் வாஜா மற்றும் இரண்டு ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்டதாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அசாஹர் அப்துல் ரஹீம் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள் எதிர் பாதையில் நுழைந்து புரோட்டான் வாஜாவின் பக்கவாட்டு கண்ணாடியில் மோதி, பின்னர் காருக்குப் பின்னால் இருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை மோதியதில் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது என்று இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இருவரும் ரெம்பாவ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், காரின் ஓட்டுநர் மற்றும் பயணிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.


