கோலாலாம்பூர், டிச 20 - தினமும் ஜோகூர் பாலத்தை கிட்டத்தட்ட 400,000 மலேசியத் தொழிலாளர்கள் கடந்து சிங்கபூருக்கு வேலைக்கு செல்கின்றனர்.
எல்லைத் தாண்டி பணிபுரியும் அவர்கள், குறிப்பாக வேலைக்கு செல்லும் மற்றும் திரும்பும் பயணத்தின் போது அதிக விபத்து அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், தற்போதுள்ள திட்டங்களின் கீழ் அவர்களுக்கு இன்னும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
அதனால், அவர்கள் சமூகப் பாதுகாப்பிலிருந்து விடுபடாமல் இருப்பதை உறுதிச் செய்ய ஒரு வழிமுறையை ஆராயுமாறு, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பெர்கேசோவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பயணம் செய்து பணிபுரியும் தொழிலாளர்களின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப, பொருத்தமான, நடைமுறைக்கேற்ற மற்றும் பயனுள்ளதாக இருக்கும் பாதுகாப்பு வடிவமைப்பை உருவாக்குவதற்காக, விரிவான ஆய்வு நடத்த பெர்கேசோவுக்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அரசு மிகவும் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துள்ளதால், அந்த ஆய்வு விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என்றார் ரமணன்.


