ஷா ஆலம், 15 டிசம்பர்- நேற்று பிற்பகலில், ஷா ஆலம், பிரிவு 20 இல் உள்ள ஒரு வடிகாலில் நிறமாற்றம் கொண்ட நீரோட்டம் காணப்பட்டதாக வந்த தகவலையடுத்து, அது கிள்ளான் ஆற்றுக்குள் பாய்ந்து கொண்டிருந்ததை கண்டறிந்த சிலாங்கூர் நீர்வள மேலாண்மை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
ஆணையத்தின் தகவலின்படி, அந்த நிறமாற்றம் கொண்ட நீரோட்டம் ஷா ஆலம் பிரிவு 15 ஆம் பகுதியிலுள்ள தொழிற்சாலைப் பகுதியில் இருந்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும், சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதன் தெளிவான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
“கிள்ளான் ஆற்றை அடையும் முன்பாக மேற்கொள்ளப்பட்ட உடனடி கண்காணிப்பில், நிறமாற்றம் கொண்ட நீரோட்டத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டன. ஆனால் அதன் உண்மையான காரணத்தை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை,” என ஆணையம் தெரிவித்தது. மேலும் அனைத்து நீர் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, மேலதிக ஆய்வுகளுக்காக மலேசிய இரசாயனத் துறைக்கு அனுப்பப்பட்டது.
மாதிரி ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், நீர் மாசுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக 1999 ஆம் ஆண்டு சிலாங்கூர் நீர்வள மேலாண்மை சட்டத்தின் 79 ஆம் பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்படும்.


