ஈரான் மீதான தாக்குதல்: உலகளாவிய வர்த்தக பாதையில் பாதிப்பு ஏற்படும் - டத்தோஸ்ரீ ஜொஹாரி கானி எச்சரிக்கை

2 மார்ச் 2026, 8:07 AM
ஈரான் மீதான தாக்குதல்: உலகளாவிய வர்த்தக பாதையில் பாதிப்பு ஏற்படும் - டத்தோஸ்ரீ ஜொஹாரி கானி எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 2- ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் உலகளாவிய வர்த்தக பாதைகளில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோதல் நீடித்தால், வர்த்தகத் தளவாடங்களில் மேலும் பல இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்துள்ளார்.

இச்சூழ்நிலை சர்வதேச பொருளாதாரத்தில் ஒரு நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.சரக்குக் கப்பல்கள் துறைமுகங்களுக்குள் நுழைவதில் ஏற்கனவே சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக, நேற்று நிலவிய பதற்றமான சூழலில் பல விமானங்கள் நடுவழியில் திருப்பி விடப்பட்டன, சில விமானங்கள் தங்களின் பயணத்தைத் தொடர முடியாமல் ரத்து செய்யப்பட்டது.

இத்தகைய போக்கு வரத்துத் தடைகள் மலேசியாவின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (New Straits Times) செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து நீடிக்கும் இந்த மோதல் போக்கு, பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை முடக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக ஜொஹாரி கானி எச்சரித்தார்.

குறிப்பாக, இந்தச் சூழல் வெளிநாட்டு முதலீடுகளில் (FDI) ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மற்றும் அதனால் விளையக்கூடிய விளைவுகள் குறித்து தனது அமைச்சகம் தற்போது தீவிரமாக மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைத் தன்மையைப் பாதுகாப்பதே தற்போதைய முக்கிய இலக்காக இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.இதற்கிடையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி பாதையான 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) வழியாக எந்த கப்பல்களும் செல்ல அனுமதி இல்லை என ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளை ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடலுடன் இணைக்கும் இந்தப் பாதை முடக்கப்படுவது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப் பாட்டை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.