புனோம் பென் , 10 டிசம்பர் — தாய்லாந்து எல்லைப் பகுதியில் தொடர்ந்து இடம் பெற்று வரும் மோதல்களின் காரணமாக, எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மொத்தம் 514 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கம்போடியா அறிவித்தது. இதனால் சுமார் 1,30,000 மாணவர்கள் மற்றும் 4,650 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, ஒட்டார் மீன் செய், பிரேஹ் விகியர் மற்றும் பந்தேயி மீன்செய் உள்ளிட்ட மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கம்போடியா–தாய்லாந்து எல்லை மோதல் கடந்த ஞாயிறு மாலையிலிருந்து மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதலில் இதுவரை ஏழு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்று கம்போடியா பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் லெப்டினன் ஜெனரல் மாலி சொச்சியெத்தா தெரிவித்தார்.
இதில் மேலும், கம்போடியா தகவல் அமைச்சர் நேத் பீக்த்ரா கூறுகையில், மோதல் பயத்தால் 16,568 குடும்பங்களைச் சேர்ந்த 54,550 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.


