சிரம்பான், டிசம்பர் 10 — ஜாலான் ராசா–மம்பாவ் சாலையில் போர்ட் டிக்சன் டோல் பிளாசாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த காரில் இருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்து, இன்னொருவர் காயமடைந்தார்.
காலை 7.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கி சூடு நடத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாப்னி அக்மத் தெரிவித்தார்.
சுட்டுக் காயமடைந்த 43 வயதான நபர் துவாங்கு ஜபார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும்போதே உயிரிழந்தார். 47 வயதான மற்றொரு நபர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். “காரின் ஜன்னல்களை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டதில், உள்ளிருந்த இருவரும் காயமடைந்தனர்.. சம்பவத்தின் நோக்கம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
காயமடைந்த நபருக்கு பல்வேறு குற்றச் சம்பவங்களை உள்ளடக்கிய 15 பதிவுகள் உள்ளதாகவும், உயிரிழந்தவருக்கு எந்தக் குற்றப் பதிவு இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.


