காவல்துறையின் தடுப்பு காவலில் இறந்த தனபாலனின் குடும்பத்திற்கு RM1.1 மில்லியன் இழப்பீடு

9 டிசம்பர் 2025, 8:45 AM
காவல்துறையின் தடுப்பு காவலில் இறந்த தனபாலனின் குடும்பத்திற்கு RM1.1 மில்லியன் இழப்பீடு

கோலாலம்பூர், டிச 9 — 2018 ஆம் ஆண்டு காவல்துறையினர் தடுப்பு காவலில் இறந்த தொழிலதிபர் ஒருவரின் குடும்பத்திற்கு RM1.1 மில்லியன் இழப்பீடு வழங்க ஷா ஆலம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ். தனபாலனின் மனைவி மற்றும் மாமனார் பி. வாத்தியன் இருவருக்கும் கவனக்குறைவுக்கான பொது இழப்பீடாக RM500,000, அனுபவித்த வேதனைக்கான இழப்பீடாக RM200,000, உயிர் இழப்புக்காக RM30,000, வாழ்க்கைப் பொறுப்புக்கான இழப்பீடாக RM414,000, மற்றும் இறுதிச்சடங்கு செலவுக்கான சிறப்பு இழப்பீடாக RM 10,000 வழங்க நீதிபதி நூர் ஹயாதி மாட் உத்தரவிட்டார்.

தனபாலன் இறந்த நாளான ஏப்ரல் 17, 2018 அன்று தொடங்கி தீர்ப்புத் தொகை முழுமையாக செலுத்தப்படும் நாள் வரை, ஆண்டுதோறும் ஐந்து சதவீத வட்டியை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கறிஞர்கள் செலவுத் தொகையாக RM7,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

திட்டமிட்ட குற்றச்செயல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் 2018 மார்ச் 29-ஆம் தேதி SOSMA சட்டத்தின் கீழ் தனபாலன் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர், ஏப்ரல் 17-ஆம் நாள் இரவு ஷா ஆலம் காவல் தலைமையகத்தில் மயங்கி விழுந்து, மருத்துவனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, பணியில் அலட்சியமாகவும் முறைகேடாகவும் இருந்ததாகக் கூறி 2021-ஆம் ஆண்டு 11 காவல்துறை அதிகாரிகள், தேசியக் காவல்துறை படைத் தலைவர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக சாந்தியும் அவரின் தந்தையும் வழக்குத் தொடுத்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், காவல்துறையின் கவனக்குறைவே தனபாலனின் மரணத்துக்குக் காரணம் என 2023இல் மேல்முறையீட்டு நீதிமன்றம் அக்குடும்பத்துக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.