பெங்கொக், டிச 8- தாய்லாந்து-கம்போடியா இடையேயான சர்ச்சைக்குரிய எல்லையில் புதிய சண்டை வெடித்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து இராணுவம் இன்று (திங்கட்கிழமை) அண்டை நாடான கம்போடியா மீது வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாகத் தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழப்பத்தில் ஒரு தாய்லாந்து இராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார். இரு தரப்பினரும் சமீபத்திய மோதலுக்காக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். திங்கட்கிழமை அதிகாலையில் தாய்லாந்தின் ஊபோன் ரட்சதனி (Ubon Ratchathani) மாகாணத்தில் உள்ள தாய்லாந்துப் படைகள் மீது கம்போடிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாய்லாந்து இராணுவப் பேச்சாளர் வின்டாய் சுவரீ (Winthai Suvaree) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
"இதையடுத்து, ஆதரவு ஆயுத தாக்குதலுக்கு உள்ளானதில் ஒரு தாய்லாந்து வீரர் கொல்லப்பட்டார், நான்கு பேர் காயமடைந்தனர்" என்று இராணுவத்திற்கு அறிக்கை கிடைத்ததாக வின்டாய் கூறினார்.
மேலும், கம்போடியப் படைகளின் தாக்குதலைத் தணிப்பதற்காக "பல பகுதிகளில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்க விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம்" என்றும் தாய்லாந்து அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


