கோலாலம்பூர், டிச 8- மலேசியா-தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நிலைமையை உடனடியாகத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் என்று மலேசியா வலியுறுத்தியுள்ளதுடன், முன்னர் எட்டப்பட்ட சமாதான முயற்சிகளைப் பாதிக்கக்கூடிய சம்பவங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நிலவும் தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை மலேசியாவின் முதன்மைக் குறிக்கோள்களாக இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மட் ஹசான் வலியுறுத்தினார்.
ஜூலை 28 அன்று மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம், ஆகஸ்ட் 7 அன்று நடந்த எல்லைப் பொதுக் குழு (GBC) கூட்டம் மற்றும் அக்டோபர் 26, 2025 அன்று கையெழுத்திடப்பட்ட கேஎல் சமாதான ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் உறுதிப்பாட்டையும் மலேசியா அங்கீகரிக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பிராந்திய புரிதல் மற்றும் முந்தைய உறுதிப்பாடுகளுக்கு இணங்க, மலேசியா அனைத்து தரப்பினரையும் ஜூலை 28 சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் 7-வது பத்தியைப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டது.
அப்பத்தி, "வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ ஆயுத மோதல் ஏற்பட்டால், எல்லையில் நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க, இரு தரப்பினரும் தற்போதுள்ள இருதரப்பு வழிமுறைகள் மூலம் உள்ளூர் மட்டத்தில் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று கூறுகிறது.
தொடர்ச்சியான உரையாடல், ஆக்கபூர்வமான இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் தற்போதுள்ள இருதரப்பு வழிமுறைகளுக்கு மரியாதை அளிப்பதன் மூலம், பிராந்தியத்தின் பொதுவான நலனுக்காக அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநிறுத்த முடியும் என்று மலேசியா நம்புகிறது என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய அறிக்கையின்படி, இரண்டு நாடுகளின் எல்லையில் புதிய சண்டை வெடித்ததைத் தொடர்ந்து தாய்லாந்து கம்போடியா மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்த வான்வழித் தாக்குதல், ஒரு தாய்லாந்து வீரரைக் கொன்ற மற்றும் இருவரைக் காயப்படுத்திய அதிகாலைத் தாக்குதலுக்கு எதிரான பதிலடி என்று நம்பப்படுகிறது.


