பெட்டாலிங் ஜெயா, டிச 5: இந்த ஆண்டு முழுவதும் பெட்டாலிங் ஜெயாவில் மொத்தம் 230 உணவகங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றாததால் மூடப்பட்டுள்ளன.
உணவு கையாளுநர்களுக்கு தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தினமும் சோதனை மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பெட்டாலிங் ஜெயா துணை மேயர் அஸ்னான் ஹசன் கூறினார்.
“மக்களும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிக்கு (MBPJ) உதவலாம் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்ட உணவகங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
“இத்தகைய நடவடிக்கை உணவு வியாபாரிகளை தொடர்ந்து தூய்மையை பராமரிக்க ஊக்குவிக்கும்,” என்று அவர் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற எம்பிபிஜே 2025 தூய்மை உணவக மற்றும் கழிப்பறை விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகவியாலர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டிலிருந்து எம்பிபிஜே கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. அதன்படி, குறைந்தபட்சத் தகுதி தரநிலைகளை பூர்த்தி செய்யும் தூய்மையான கழிப்பறையைக் கொண்டிருக்கும் உணவகங்களுக்கே ஊராட்சி மன்றம் தொழில் அனுமதி வழங்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த வழிகாட்டுதல்கள் வணிக மற்றும் பொது கட்டடங்களில் குறைந்தது ஒரு ஆண் கழிப்பறை மற்றும் இரண்டு பெண் கழிப்பறைகள் என்ற குறைந்தபட்ச விகிதத்தையும் நிர்ணயிக்கின்றன.
“தற்போது நாங்கள் செய்வது உணவகங்களை தற்காலிகமாக மூடுவதே ஆகும். இரண்டு வாரங்களுக்குப் பிறகும் நிலைமை மேம்படவில்லை என்றால், தொழில் அனுமதியைப் புதுப்பிக்க முடியாதது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.


