கோலாலம்பூர், டிச. 4 — பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஷாம்சுல் இஸ்கந்தர் மொஹ்ட் அகின் மற்றும் தொழிலதிபர் ஆல்பர்ட் டேய் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நீதிமன்ற அமைப்பு பதிவுகளின்படி, 50 வயதான ஷாம்சுல் இஸ்கந்தர் மற்றும் 37 வயதான ஆல்பர்ட் டேய் ஆகியோரது வழக்குகள் காலை 9 மணிக்கு நீதிபதி சுசானா ஹுசின் முன்பாக குறிப்பிடப்படும். நேற்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இவ்விருவரும் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் 5 குற்றச்சாட்டுகளையும், வெள்ளிக்கிழமை ஷா ஆலம் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு கூடுதல் குற்றச்சாட்டையும் எதிர்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் MACC சட்டம் 2009-இன் பிரிவு 17(a) (லஞ்சம் பெறுதல்) மற்றும் பிரிவு 17(b) (லஞ்சம் கொடுத்தல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருவரது மீதான விசாரணை அதே சட்டத்தின் பிரிவு 16-இன் கீழ் தொடங்கப்பட்டது. ஷாம்சுல் இஸ்கந்தர் மற்றும் ஆல்பர்ட் டேய் ஆகியோர் நவம்பர் 29 முதல் 6 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் MACC-இன் கோரிக்கையை ஏற்று விசாரணையை முடிக்க அனுமதி அளித்த பிறகு நடந்தது. இந்த வழக்கு, சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தொகை பணம் தொடர்பாக ஆல்பர்ட் டேய், ஷாம்சுல் இஸ்கந்தருக்கு இடையே நடந்த பண பரிவர்த்தனை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்ட்டுகளைச் சார்ந்தது.



