கோலாலம்பூர், மார்ச் 3 - ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளில், 2025-ஆம் ஆண்டு முழுவதும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) மீட்டெடுத்த பணம் மற்றும் சொத்துக்களின் மொத்த மதிப்பு குறித்து இன்று மக்களவையில் முக்கியக் கவனம் செலுத்தப்படும்.
நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின்போது, வி. கணபதிராவ் (பிஎச்-கிள்ளான்) இந்தக் கேள்வியை பிரதமரிடம் முன்வைப்பார். மடாணி அரசாங்கத்திற்கு முன்னும் பின்னும் உள்ள புள்ளிவிவர ஒப்பீடுகளையும் அவர் கோருவார்.
அதே அமர்வில், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி குறித்த மலேசியக் காவல்துறையின் (பி.டி.ஆர்.எம்) விசாரணை நிலை, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அதனால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் விசாரணையில் அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய அம்சங்கள் உள்ளதா என்பது குறித்தும் டத்தோஸ்ரீ ஷாஹிதான் காசிம் (பிஎன்-ஆராவ்) பிரதமரிடம் கேள்வி எழுப்புவார்.
வாய்மொழி கேள்வி பதில் அமர்வின் போது, குறிப்பாக மக்களின் உரிமைகள் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்டங்கள் அவசரமாக இயற்றப்படாமல், உயர் தரத்துடன் இருப்பதை அரசாங்கம் எவ்வாறு உறுதி செய்கிறது என்பதை விளக்குமாறு டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் (பிஎன்-ஜெலுபு) பிரதமரைக் கேட்பார்.
மேலும், கிராமப்புற மக்களிடையே பரவிவரும் தொற்றா நோய்கள் (NCD) குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் சிறிய மாவட்டங்களில் கூடுதல் துணை டயாலிசிஸ் மையங்களைத் திறப்பதன் மூலம் அதிகரித்து வரும் டயாலிசிஸ் சிகிச்சை செலவுகளைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சகம் எடுத்துள்ள முனைப்பான நடவடிக்கைகள் குறித்தும் டத்தோ அப்துல் காலிப் அப்துல்லா (பிஎன்-ரொம்பின்) சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்புவார்.
மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறு குற்றங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்களைச் சமாளிப்பதற்கான உத்திகள் குறித்து முகமது இஸ்மி மாட் தாயிப் (பிஎன்-பாரிட்) உள்துறை அமைச்சரிடம் கேட்கும் கேள்வியும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதன்பின்னர், சட்டத்துறைத் தலைவர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் பங்கைப் பிரிப்பது தொடர்பான அரசியலமைப்பு (திருத்தம்) (எண் 2) மசோதா 2026-இன் இரண்டாவது வாசிப்புடன் மக்களவை அமர்வு தொடரும்.
கடந்த ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெற்ற 15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் முடிவடைகிறது.







