கோலாலம்பூர், டிச 4- பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர், டத்தோஶ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின், சபா மாநிலத்தில் கனிம ஆய்வு உரிமங்களை அங்கீகரித்தது தொடர்பான, RM176,829.03 பெறுமதியான நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இன்று இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
சபா கனிம ஆய்வு உரிம ஒப்புதல்கள் சம்பந்தப்பட்ட இந்த நான்கு குற்றச்சாட்டுகளையும் வாசித்த பிறகு, 50 வயதான ஷம்சுல் இஸ்கந்தர், நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் தனக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் மறுத்து விசாரணை கோரினார்.
இதற்கிடையில், ஆல்பர்ட் டேய் (37) என்பவரும், ஷம்சுல் இஸ்கந்தருக்கு RM176,829.03 லஞ்சம் கொடுத்த நான்கு குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும், இவர்கள் இருவரும் வரும் வெள்ளிக்கிழமை ஷா ஆலம் அமர்வு நீதிமன்றத்தில் தலா ஒரு குற்றச்சாட்டிற்காக மீண்டும் குற்றம் சாட்டப்படுவார்கள். இந்த வழக்குகள், லஞ்சத்தைப் பெறுவது தொடர்பான எம்ஏசிசி சட்டம் பிரிவு 17(ஏ) மற்றும் லஞ்சம் கொடுப்பது தொடர்பான பிரிவு 17(பி) ஆகியவற்றின் கீழ் உள்ளன, அதே சமயம் இருவர் மீதான விசாரணையும் எம்ஏசிசி சட்டம் 2009 பிரிவு 16-ன் கீழ் தொடங்கப்பட்டது.
இதற்கு முன்னர், ஷம்சுல் இஸ்கந்தர் மற்றும் ஆல்பர்ட் டேய் ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) வாகனங்களில் இன்று காலை 8.00 மணியளவில் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தனர்.
நேற்று, எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி, விசாரணை ஆவணங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், இருவர் மீதும் வழக்குத் தொடர உத்தரவு கிடைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.


