6.15 விழுக்காடு ஈவுத்தொகை, KWSP-யின் திறமையான முதலீட்டு நிர்வாகத்தைப் பிரதிபலிக்கிறது - பிரதமர் அன்வார்

2 மார்ச் 2026, 2:40 AM
6.15 விழுக்காடு ஈவுத்தொகை, KWSP-யின் திறமையான முதலீட்டு நிர்வாகத்தைப் பிரதிபலிக்கிறது - பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், மார்ச் 2 – ஊழியர் சேமநிதி வாரியத்தின் (KWSP) 2025ஆம் ஆண்டுக்கான மரபுசார் மற்றும் ஷரியா சேமிப்புகளுக்கு 6.15 விழுக்காடு ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பது, அந்த ஓய்வூதிய சேமிப்பு நிதியத்தின் திறமையான முதலீட்டு நிர்வாகத்தைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

 நிதி அமைச்சருமான அன்வார், இந்த அறிவிப்பு நாட்டின் ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கையையும் காட்டுகிறது என்றார்.

 "சவால்மிக்க உலகளாவிய சந்தை நிலவரங்களுக்கு மத்தியிலும், இந்த சாதனை KWSP-யின் முதலீட்டு நிர்வாகத்தின் வலிமையையும், நாட்டின் ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது," என்று அன்வார் இன்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 மடாணி அரசாங்கம் இந்தச் செயல் திறனை வரவேற்பதாகவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் நீடித்தக் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் அவர் கூறினார். இதன்மூலம், ஒவ்வொரு குடிமகனும் தங்களது எதிர்காலத்தை அதிக நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் திட்டமிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 KWSP இன்று 2025ஆம் ஆண்டுக்கான மரபுசார் மற்றும் ஷரியா சேமிப்புக் கணக்குகளுக்கு 6.15 விழுக்காடு ஈவுத்தொகையை அறிவித்தது. இதன் மொத்தப் பட்டுவாடா மதிப்பு 79.6 பில்லியன் ரிங்கிட் ஆகும்.

 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், KWSP விநியோகிக்கக்கூடிய மொத்த வருமானமாக 82.7 பில்லியன் ரிங்கிட்டைப் பதிவு செய்துள்ளது. இது 2024-இல் பதிவு செய்யப்பட்ட 75.5 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது 9.5 விழுக்காடு அதிகமாகும். 

வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பரந்த அளவிலான தொழிலாளர்களின் பங்களிப்பால், 2025-இல் அதன் உறுப்பினர் எண்ணிக்கை 18.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. 

செயல்நிலை உறுப்பினர்களின் எண்ணிக்கை 10.6 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதன்வழி, செயல்நிலை மற்றும் செயல்நிலையற்ற உறுப்பினர்களின் விகிதம் 59:41 ஆக மேம்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.