கோத்தா பாரு, டிச 2- கிளாந்தான், குவால் ஈப்போ (Gual Ipoh), கம்போங் பாக்குவில் (Kampung Paku) நேற்று முன்தினம் காலை தனது மனைவியைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 63 வயதுடைய நபர், ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கான இந்த தடுப்பு காவல் உத்தரவு இன்று முதல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை அமலில் இருக்கும் என்று மாஜிஸ்திரேட் துன் ஃபேஸ் ஃபிக்ரி துன் அஸ்ருல் சைனி உத்தரவிட்டார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இந்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சந்தேக நபர் இன்று காலை 9.25 மணியளவில் சிறைச்சாலை உடையுடன் தானா மேரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நேற்று முன்தினம் காலை நடந்த சம்பவத்தில், 40 வயதான மஸ்துரா அப்துல்லா என்ற பாதிக்கப்பட்ட பெண், தனது கணவனால் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு, அவர்கள் வசிக்கும் வீட்டிலேயே உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
காலை 10 மணியளவில் மனைவியைக் கொலை செய்த சந்தேக நபர், மதியம் 12 மணிக்குக் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றதாகவும், பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தனது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் ரகசியத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப் பட்டதன் காரணமாக ஏற்பட்ட பொறாமை இக்கொலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




