மலேசியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம்- சீனாவுக்கான ஒத்துழைப்பில் பாதிப்பில்லை- அன்வார் இப்ராஹிம்

1 டிசம்பர் 2025, 10:20 AM
மலேசியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம்- சீனாவுக்கான ஒத்துழைப்பில் பாதிப்பில்லை- அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர், டிச 1- மலேசியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், சீனாவுடனான நாட்டின் ஒத்துழைப்பைக் கட்டுப்படுத்தாது என்று பெய்ஜிங்கிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

இங்குள்ள Miti கோபுரத்தில் பெரோடூவாவின் முதல் மின்சார வாகனத்தை (EV) அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஒப்பந்தம் குறித்து சீனா விளக்கம் கோரியதும், அதற்கு மலேசியா விளக்கமளித்ததையும் உறுதிப்படுத்தினார்.

"அவர்கள் சிறிது விளக்கம் கேட்டிருந்தனர். நாங்கள் அதைக் கொடுத்து விட்டோம். இந்த விஷயத்தை நாம் பெரிது படுத்தத் தேவையில்லை என்று நினைக்கிறேன். சீனா ஒரு மிக முக்கியமான வர்த்தகப் பங்காளியாக தொடர்கிறது," என்று பிரதமர் கூறினார்.

"உண்மையில், நான் பிரதமர் லீ கியாங்குடன் நடத்திய இருதரப்புக் கூட்டத்தின் போதும், இந்த ஒப்பந்தத்தில் சீனாவுடனான எங்களின் ஒத்துழைப்பைப் பாதிக்கும் எதுவும் இல்லை என்பதை நான் அவரிடம் விளக்கினேன்," என்றும் அன்வார் தெரிவித்தார்.

அண்மையில், அமெரிக்கா-மலேசிய வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள சில ஷரத்துகள் குறித்து மலேசியப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது சீன அதிகாரிகள் 'தீவிர கவலைகளை' வெளிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் மலேசியாவுக்கு விஜயம் செய்த போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரதமர் அன்வாரும், அப்போது பதவி விலகவிருந்த முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஸிஸும் நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசிய போது, மலேசியாவின் ஆதிபத்தியம் மற்றும் பூமிபுத்ரா உரிமைகள் உட்பட உள்நாட்டுக் கொள்கைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன என்று வலியுறுத்தியிருந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.